ஸ்ரீ கங்கை வராக நதீஸ்வரர் கோவில்

‘சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர் கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி.

 ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோவில்.

வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப் படுகிறது.

அதன் காரணமாகவும் சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோவில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். மேலும் இந்த இறைவன் அகத்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோவில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது.

இந்த ஆற்றின் கரையில் குபேர வர்மன், கேசவ வர்மன், நாகேந்திரன், கமலன், வியூக முனி, மங்கலன் முதலான நவசித்தர்களின் ஜீவசமாதிகள் இருந்ததாகவும், தலத்தின் ஈசான்ய மூலையில் சித்த புருஷர்களான ஸ்ரீ கங்காதர சுவாமிகளுக்கும் ஸ்ரீ சதாசிவ சுவாமிகளுக்கும் அதிஷ்டானங்கள் இருந்துள்ளதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆலயத்தில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சகல வியாதிகளையும் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இந்தத் தலம். மேலும், இத்தலம் காசிக்கு நிகராகப் போற்றப்படுவதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் சொல்லப்படுகிறது.

வேத விற்பன்னர் ஒருவர், தன் தந்தைக்கு நீத்தார் கடன் செய்ய அஸ்தியைக் காசிக்குக்கொண்டு சென்றதாகவும், அவர் திருக்காஞ்சியை அடைந்த போது, மண் பானையில் இருந்த அஸ்தி பூக்களாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.

முற்காலத்தில் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திருக்காஞ்சி தலத்துக்கும் வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம். காசியில் ஸ்ரீ விசாலாட்சி, 

ஸ்ரீ அன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர்.

சுவாமி சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள்.

மேலும், கோவிலில் பரிவார மூர்த்தங்களாக ஸ்ரீ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், ஸ்ரீ விஷ்ணு துர்கை, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ லட்சுமி வராகப் பெருமாள், ஸ்ரீ அகத்தியர், நவகிரகங்கள் ஆகியோரும் அமைந்திருக்கின்றனர். 

12-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோவிலின் பெரும்பகுதி சேதம் அடைந்து நீரில் மூழ்கிவிட்டதாம். ஆற்று நீரில் பாதி அளவுக்கு மூழ்கியிருந்த ஈசனுக்குத் தினமும் அர்ச்சகர் ஒருவர் நீந்திச் சென்று நித்திய பூஜைகள் செய்து வந்ததாராம்.

பிற்காலத்தில் சுவாமியின் லிங்கத் திருமேனி மட்டும் இப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு, புதிதாகக் கோவில் கட்டி பிரதிஷ்டை செய்திருப்பதுடன் பரிவார மூர்த்தங்களையும் புதிதாகப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

இங்குள்ள கருவறையானது தஞ்சை பெரிய கோவிலின் கருவறையை ஒத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவிலில் பௌர்ணமி தோறும் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

அமாவாசை நாள்களில் காலை வேளையில் இந்தக் கோவிலுக்கு வந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் விலகி, சுவாமியின் திருவருளோடு முன்னோரின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நவராத்திரி நாள்களில் அம்பிகை இருவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விஜயதசமி நாளில் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமரிசையாக நடைபெறும்.

பாண்டிச்சேரி – விழுப்புரம் சாலையில் வில்லியனூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்காஞ்சி திருத்தலம்.

நன்றி.    ஓம் நமசிவாய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s