விழுப்புரத்தில் அமைந்துள்ள திருக்கோவிலூர்

பக்தியைப் பரப்பும் கோயில்களைக் கொண்ட இத்தலத்தில், பிறருக்காக விட்டுக் கொடுத்தால், இறைவனைக் காணலாம், அவனருளைப் பெறலாம் என்ற உண்மையை மூன்று ஆழ்வார்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.

திரிவிக்கிரம சுவாமியை தரிசிப்பதற்காக வந்தார் பொய்கையாழ்வார். பொழுது சாய்ந்துவிட்டது. கோயில் நடை சாத்தியிருப்பார்களே என்று தயக்கமாக யோசித்தார். முயன்று பார்க்கலாமா, பெருமாளை தரிசனம் செய்துவிட முடியுமா என்று சந்தேகப்பட்டுக் கொண்டே கோயிலை நோக்கி அவர் நகர்ந்தபோது, திடீரென்று பெருமழை பிடித்துக் கொண்டது. ஓடிப்போய் கோயிலுக்குள் ஒதுங்கலாமா என்று யோசித்தார். ஆனால், மழை அவரை அதிகமாக பயமுறுத்தவே, சற்றுத் தொலைவில் இருந்த ஒரு சிறு மண்டபத்தைக் கண்டார். விரைந்து சென்று அதனுள் பதுங்கிக் கொண்டார்.

இருளும் மழை மேகங்களால், மேலும் கருக்கவே, அங்கேயே படுத்துறங்கி, மறுநாள் விக்கிரம சுவாமியை தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்தார். படுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தாரே தவிர, கால்களை மடக்கி, உடலைக் குறுக்கிப் படுக்கதான் அங்கே இடம் இருந்தது. சிறிது நேரம்கூட சென்றிருக்காது, அந்த மண்டபத்துக்குள் இன்னொருவர் வந்து நுழைந்தார். அவரும், பெருமாளை தரிசிக்க வந்தவர், மழை காரணமாக கோயிலுக்குள் நுழைய முடியாமல் ஒதுங்கத்தான் வந்திருந்தார். அவரைப் பார்த்தும், அந்த இருளில் அடையாளம் தெரியவில்லை பொய்கையாழ்வாருக்கு. ஆனாலும், ‘‘வாருங்கள், சுவாமி, நாம் இருவரும் அமர்ந்து கொள்ள இங்கே இடம் இருக்கிறது,’’என்று சொல்லி, படுத்திருந்த அவர் எழுந்து குந்தி அமர்ந்து கொண்டார். வந்தவர் பூதத்தாழ்வார். பொய்கையாழ்வாருக்கு நன்றி சொல்லி அவர் கொடுத்த இடத்தில் இவரும் அமர்ந்து கொண்டார்.

இருவரும் பெருமாளைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, மூன்றாவதாக ஒரு நபர் உள்ளே நுழைந்தார். ஆனால் அங்கே ஏற்கெனவே இருவர் அமர்ந்திருப்பதை மெல்லிய வெளிச்சத்தில் கண்ட அவர், அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி, வெளியே நின்றார்.

ஆனால், மழை வலுக்கவே, இவர் பெரிதும் நனைய வேண்டியிருந்தது. இதைக் கண்ட உள்ளிருந்த இருவரும், ‘‘உள்ளே வாருங்கள், வெளியே மழையில் வீணாக நனையாதீர்கள். எங்கள் இருவருக்கும் இங்கே அமர்ந்து கொள்ள இடம் கொடுத்திருக்கும் அந்தப் பெருமாள், உங்களுக்கும் இடமளித்திருக்கிறான். இருவரும் உட்கார்ந்திருக்கும் இந்த இடத்தில் நாம் மூவருமாக நின்று கொள்வோம், வாருங்கள்’’என்று அவரை அழைத்தார்.

மூன்றாவதாக வந்தவர் பேயாழ்வார். இவரும் திருக்கோவிலூருக்கு திரிவிக்கிரமரை தரிசிக்க வந்தவர்தான். நடை சாத்தியிருந்ததும் மழை பிடித்துக் கொண்டதும், இவரும் இந்த மண்டபத்திற்குள் புகலிடம் கோர வைத்திருந்தன. 

மூவரும் இருந்த இடத்தில் நின்று கொண்டார்கள். ஒருவர் படுக்கப் போதுமான இடம், இருவர் அமரப் போதுமாக இருந்தது; மூவர் நின்றுகொள்ளப் போதுமானதாக இருந்தது!

ஆனால் நான்காவதாக ஒருவர் உள்ளே நுழைந்தபோது அம்மூவருமே சற்று திகைத்தனர். அவருக்கு இடம் கொடுக்க மனம் இருக்கிறது; ஆனால் மண்டபத்தில் இடமில்லையே…

அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பேரொளி தோன்றியது. அங்கே திரிவிக்கிரம சுவாமி அவர்களுக்கு தரிசனம் கொடுத்தார். நாலாவதாக வந்தவர் அவர்தான்! மறுநாள்தான் தரிசனம் காண முடியும் என்று நினைத்திருந்த பெருமாள் இப்போது அவர்கள் கேளாமலேயே அவர்கள் முன் நின்றிருந்தார்!

அதாவது, இறைவனை எங்கெல்லாம், எப்போதெல்லாம் காணலாம்? எங்கெல்லாம் மனம் பரந்து விரிந்திருக்கிறதோ, மற்றவருக்கும் இடமளிக்க அந்த மனம் முன் வருகிறதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் இறைவனைக் காணலாம். 

இதனாலேயே திருக்கோவிலூரை பிரபந்தம் விளைந்த திருப்பதி என்று ஆன்றோர்கள் போற்றிப் புகழ்ந்தார்கள்.

மேலே கண்ட மூன்று ஆழ்வார்களும் அப்படி தம்மிடத்தை இன்னொருவருக்குப் பகிர்ந்தளிக்க தாமே முன்வந்தபோது, அங்கே இறைவனும் வந்து நின்று கொண்டான்!

நன்றி    ஓம் நமசிவாய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s