8 ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட அதிசிய ஆலயம்

கும்பகோணம் அருகில் உள்ள திருவிசைநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவில் தான், 8 ஸ்தல விருட்ச மரங்களை கொண்ட ஆலயம்.*ஸ்தல விருட்சங்கள் :*வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு எட்டு ஸ்தல விருட்சங்கள் இருக்கின்றன.*இன்னும் சில அதிசியங்கள் :*பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் முதலில் இருக்கும். பின்னர் பலிபீடம், நந்தி என்று இருக்கும். ஆனால் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் 

முதலில் உள்ளது.இறைவன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனியின் மேல் பகுதியில் ஏழு சடைகள் காணப்படுகின்றன.சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாலயத்தில் முதலாம் பிரகாரத்தில் மேற்கு பார்த்த சன்னதியில் நான்கு பைரவர்கள், சதுர்கால பைரவர் (ஞானகால பைரவர், சுவர்னாகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர் மற்றும் யோகபைரவர்) என்று அழைக்கப்படுகின்றனர். இங்கு சுக்கில பட்ஷ அஷ்டமி வழிபாடு சிறப்பு.

நந்தி சற்றே தலையைச் சாய்த்து எதையோ கேட்டபடி வலது பக்கம் சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.*ரிஷப இராசிக்குரிய பரிகார தலம் இது. *இந்த ஆலயத்தை பற்றிய மேலும் விரிவான விபரங்கள் :*காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 43-வது தலமாக இருப்பது திருவியலூர். தற்போது திருவிசநல்லூர் (திருவிசைநல்லூர்) என்று வழங்கப்படுகிறது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

*இறைவன் பெயர் :* சிவயோகிநாத சுவாமி, வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்வரர்*இறைவி பெயர் :*சௌந்தரநாயகி, சாந்தநாயகி

*கோயில் அமைப்பு :*

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், நாம் காண்பது முதலில் நந்தி, பின் கொடிமரம், பலிபீடம் உள்ளது. சிவாலயங்களில் முதலில் கொடிமரமும் அதன் பலிபீடம், நந்தி இருப்பது வழக்கம். இங்கு நந்தி முதலில் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. உள் வாயிலைக் கடந்து சென்றால், இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாகக் காட்சி தருகிறார். கருவறை தேவ கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சந்நிதி உள்ளது. 

பஞ்சலிங்கங்கள், ஸ்தல விநாயகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன. எட்டு தீர்த்தங்களும், எட்டு தல விருட்சங்களும் உடையது இத்தலம்.சுவாமி சந்நிதிக்கு தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள் சந்நிதியும் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது. இங்கே மகாவிஷ்ணு, லட்சுமியை தன் மடியில் அமர வைத்துக்கொண்டு லட்சுமிநாரயணனாக அருள்பாலிக்கிறார். 

இந்த ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாளை, அவரின் ஜென்ம நட்சத்திரமான திருவோணத்தன்றும், சிரவணம், ஏகாதசி மற்றும் சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், அனைத்து துன்பங்களும் விலகும், திருமணத் தடை விலகும், மேலும் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்.இத்தலத்திலுள்ள சதுர்கால பைரவர் சந்நிதியும் மிக விசேஷமானது. யுகத்துக்கு ஒரு பைரவராக நான்கு பைரவர் காட்சி தருகின்றனர். 

வளர்பிறை, தேய்பிறை அஷ்டதி திதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்திலும் மிளகு தீபம் ஏற்றி சதுர்கால பைரவர் சந்நிதியில் வழிபடுவது மிகவும் நல்லது.கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த ரிஷப ராசிக்காரர்களும், மற்றும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்துகொள்ள மிகச் சிறந்த தலம் இதுவாகும். 

*சூரிய கடிகாரம் :*கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்தக் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரைவட்ட கோளம் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணிவரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு, அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். தமிழர்கள் வானவியல் அறிவியல் வல்லுநர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு இந்த சூரிய ஒளி கடிகாரம்  எடுத்துக்காட்டு.குழந்தைப்பேறு கிடைக்க திருவியலூர் ஒரு சிறந்த தலமாகக் கருதப்படுகிறது. 

சுந்தரசோழ மன்னன் குழந்தைப்பேறு வேண்டி ஒரு பிரம்மாண்டமான தங்கத்தால் ஆன பசு மாடு ஒன்றைச் செய்து, அதன் பின்வழியே உள்ளே நுழைந்து பின்பு அதன் வாய் வழியே வெளிவந்து அதன் பலனாக மகனைப் பெற்று, பிறகு அந்தத் தங்கப் பசுவைப் பிரித்து பல ஆலயங்களுக்குத் தானமாக அளித்தததாக இத்தல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தற்காலத்தில், தங்கத்துக்குப் பதிலாக கணவனது எடைக்குச் சமமாக நெல்லை தானம் அளித்தால் குழந்தைப்பேறு கண்டிப்பாக கிடைக்கும். இந்த வேண்டுதல், இறைவன் சிவயோகிநாத சுவாமி சந்நிதியில் நடைபெறுகிறது

இத்தலத்தில், சிவயோகி முனிவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் இறைவன் அடைக்கலம் கொடுத்ததால் (சிவலிங்க மூர்த்தியில் எழுவரும் பிரவேசித்தமையால்), இத்தல இறைவன் சிவயோகிநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இறைவனது திருமேனியில் ஏழு சடைகள் இருப்பதைக் காணலாம். இத்தல இறைவனை வணங்குவதால் குரு தோஷம் நீங்கும், குருவின் அருள் கிடைக்கும்.தன் வீட்டுக் கிணற்றில் கங்கையை பெருகிவரச் செய்த ஸ்ரீதர அய்யாவாள் பிறந்த தலம் என்ற பெருமையுடையது திருவிசநல்லூர் திருத்தலம். ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று ஸ்ரீதர அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கா ஸ்நானம் செய்ய ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள்.திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. நீர்வளம்மிக்க வியலூர் என்று தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

*அமைவிடம் :*

கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக சூரியனார் கோவில் செல்லும் வழியில் திருவிசைநல்லூர் உள்ளது. 

காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான திருவிடைமருதூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வேப்பத்தூர் செல்லும் வழியில் மேற்கில் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்திருக்கிறது. 

இத்தலத்திலிருந்து  2 கி.மீ. தொலைவில், திருந்துதேவன்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவியலூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

நன்றி. ஓம் நமசிவாய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s