சித்தர்களும், யோகிகளும் வணங்கும் மாவூற்று வேலப்பர்

     ‌ தமிழ்நாட்டில் உள்ள தேனிமாவட்டத்தில் ஆண்டிப்பட்டி- தெப்பம்பட்டி அருகில் இருக்கும் மலைப்பகுதியில் பல்லாண்டு காலமாக   பளியர்  இன  மலைவாசி   மக்கள்   வசித்து வருகின்றனர் . அவர்கள் வள்ளிக்கிழங்கை பயிரிட்டு அவற்றை உணவாக உண்டு வந்தனர். வறட்சி காரணமாக பலரும் வேறு இடத்துக்கு சென்றுவிட்ட நிலையிலும் அங்கேயே தங்கிவிட்ட ஒரு குடும்பத்தினர் ஒருமுறை வள்ளிக்கிழங்கை எடுக்க மண்ணை கிளறிய போது கிழங்கு கிடைக்காமல் வள்ளிக்கிழங்கின் வேர் மட்டும் வளர்ந்துக் கொண்டே போனது. எனினும் விடாமல் தோண்டியதில் வேரின் முடிவில் சுயம்புவாக வேலப்பர் இருந்ததைப் பழங்குடியினர் கண்டனர்.    அப்போதைய ஜமீனிடம் இத்தகவலைத் தெரிவித்து சுயம்பு மூர்த்தியாக உருவான வேலப்பருக்கு கோயில் எழுப்பப்பட்டது. அன்று முதல் இன்று வரை பரம்பரையாக இந்த மூலவருக்கு பளியர் இன மக்கள்தான் வழிபாடு செய்கிறார்கள். பூஜையின் போது சம்ஸ்கிருத ஸ்லோகங்களோ, தமிழ் போற்றியோ சொல்வதில்லை. பக்தர்கள் கொண்டுவரும் பூஜை பொருட்களை படைத்துவிட்டு தீபாராதனை காட்டுவார்கள். அந்தசமயம் பக்தருக்கு தெய்வம் ஏதும் கூறினால் பணிவுடன் கேட்டுக்கொள்வதுடன், மேற்கொண்டு விபரங்களை பெற (மனிதனுடன் மனிதன் பேசுவது போல) தெய்வத்திடம் பேசி, தெய்வம் கூறியதை, வந்த பக்தருக்கு சொல்கிறார்கள்.   மாவூற்று வேலப்பரும், மாவூற்று விநாயகரும் வடக்கு நோக்கி அருள்வது இத்தலத்தின் சிறப்பு. உடன் சப்தமாதர்களும் அருள் புரிகின்றனர். மலையின் அடிவாரத்தில் சக்தி கருப்பண்ணசாமி அருள்புரிகின்றனர். தெப்பம் பட்டியில் பெரிய தெப்பம் ஒன்று உள்ளது. இந்த தெப்பத்துக்கும், தலத்துக்கும் சுரங்கத் தொடர்புகள் இருப்பதாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப 300 படிகளைக் கடந்தால் வேலப்பரைத் தரிசிக்கலாம். இவர் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்துக்கு அருகில் மாமரத்தின் வேரிலிருந்து ஊற்று ஊற்றெடுத்து வழிந்தோடி பெரிய தீர்த்தமாக பெருகி உள்ளது. அதனால் வேலப்பனை மாவூற்று வேலப்பன் என்று அழைக்கிறார்கள்.   குகைகள் நிறைந்துள்ள இந்த பகுதியில் சித்தர்களும், யோகிகளும் வேலப்பனை நினைத்து தவம் புரிவதாக அங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். கடன் தொல்லை, தீராத பிணி, சரும வியாதிகளை உடையவர்கள் இயற்கை அன்னையின் மடியில் எழில் கொஞ்சும் அழகில் அமைந்திருக்கும் ஊற்றில் நீராடி, மாவூற்று வேலப்பனை மனமுருக வேண்டினால் தீராத நோயும் தீரும். மனக்குறைகளும் அகலும். இங்குள்ள வேலப்பருக்கு பால், இளநீர்,பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் நினைத்தது நிறைவேற வேலப்பனை தரிசித்து பால்குடம், காவடி எடுக்கின்றனர். விவசாயிகள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டு விவசாயம் தழைக்க வேண்டுவார்கள். பக்தர்கள் ஊற்றிலிருந்து வெளிப்படும் தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்துச் செல்கின்றனர். இந்தத் தீர்த்தத்தை நீரில் கலந்து வீட்டுக்குள் தெளித்தால் நல்ல சக்திகள் வீட்டுக்குள் இருக்கும் .   ஆண்டிபட்டி ஒன்றியம் வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் உள்ள மாவூற்று வேலப்பர் கோவில் அருகே பழங்குடி இனத்தைச் சேர்ந்த 27 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 21 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு மலைகளில் சென்று பூமி சக்கரை கிழங்கு, நல்லாணி, பால்குலை, கடுக்காய், நெல்லிக்காய் ,சிறுகுறிஞ்சி, மாவலிங்கப்பட்டை, தேன் உள்ளிட்ட விளை பொருட்களை எடுத்து வந்து மூலிகை கடைகளில் விற்று சமையல் பொருட்கள் வாங்கி செல்கிறார்கள் . ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அவர்களின் குல தெய்வமான மலை மீது உள்ள பளிச்சியம்மன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம்.  

  நன்றி. ஓம் நமசிவாய    

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s