கைங்கர்யத்தில் உயர்வு தாழ்வேது

  ஒரு கைங்கர்யம் கூட விடாமல்  ராமனின் இளவல்களும், சீதையும் சேர்ந்து தயாரித்த பட்டியலைப் பார்த்தார் ராமன்  விடுபட்ட கைங்கர்யத்தைத் தான் செய்வதற்கு அனுமதி கேட்டார் ஹனுமான். எதையும் விட்டுவிடவில்லை என்ற தைரியத்தில் அவர்கள் ஒப்புக்கொள்ள, ஹனுமானின் உற்சாகம் அவர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. மீண்டும் பட்டியலை வாங்கிச் சரிபார்த்துவிட்டுக் கேட்டான் இலக்குவன்.இவற்றில் எந்த சேவை விடுபட்டு விட்டது என்று நினைக்கிறாய் ஹனுமான்?   ப்ரபு கொட்டாவி விடும்போது அவர் வாய்க்கு நேராக சொடக்கு போடுவதுதான். அது ஒரு வேலையா?ஆமாம். இல்லையென்றால் ப்ரபுவுக்கு வாய் வலிக்காதா? ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டதால், அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.   முதலிலாவாது பரவாயில்லை. எல்லா சேவைகளையும் செய்தபோதும், வேலை முடிந்தால், ஹனுமான் ஒரு இரண்டடிகளாவது ராமனை விட்டுத் தள்ளி நிற்பார். இப்போது என்னடாவென்றால், எப்போது பார்த்தாலும் ராமனின் வெகு அருகில் அல்லது காலடியிலேயே இருக்க ஆரம்பித்தார். கேட்டால் ராமன் எப்போது கொட்டாவி விடுவாரென்று தெரியாது. அதனால் எப்போதும் தயாராக அருகிலேயே இருக்க வேண்டுமே என்பார்.கொட்டாவிக்கு சொடுக்கு போடுவதெல்லாம் ஒரு வேலையா என்று நினைத்தவர்கள் இப்போது அதுதான் பெரிய வேலையோ என்று நினைத்தார்கள். ஏனெனில் ஒரு கணம் கூட ராமனை விட்டு கண்ணை எடுக்காமல் அவரது திருமுக மண்டலத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் பாக்யம் கிடைக்கிறதே.   இரவிலும், ராமன் உறங்கும் வரை கொட்டாவிக்கு சொடுக்கு போடுகிறேன் என்று அருகிலேயே ஹனுமான் நிற்பார். ராமன் உறங்கிய பின் அறை வாசலில் நிற்பார். முன்பாவது சீதை பள்ளியறைக்குள் வந்ததும் வெளியே செல்வார். இப்போது சீதையாலும்கூட ராமனிடம் தனிமையில் பேச இயலவில்லை.  மிகவும் பொறுத்துப் பார்த்த அவர்கள் ஒரு கட்டத்தில், ஹனுமானுக்கு ஏதாவது வேலை கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு நாளாவது ராமனோடு சற்று அளவளாவலாம் என்று நினைக்கும் அளவிற்குப் போய் விட்டனர்.அனைவரும் ஒன்றுகூடிப்பேசியபின், கௌசல்யையிடம் சொன்னார்கள்.   அம்மா, நாளை காலை ஹனுமானிடம் எதையாவது கொடுத்து உங்களிடம் கொடுத்துவிட்டு வரச் சொல்லி அனுப்புகிறோம். நீங்கள் அவரைப் பிடித்து மாற்றி மாற்றி உச்சி வேளை வரை ஏதாவது வேலை வாங்குங்கள்.  நாங்கள் சற்று நேரமாவது ராமன் அண்ணாவோடு பேசுகிறோம்.அவர்களைப் பார்த்தால் மிகவும்  பரிதாபமாய் இருந்தது கௌசல்யைக்கு. சரியென்று ஒப்புக்கொண்டாள்.  சொன்னபடி ஏதோ ப்ரசாதங்களையெல்லாம் போட்டு ஒருமூட்டை கட்டி,  இது ப்ரசாதமாதலால், பணியாளிடம் கொடுத்தனுப்ப வேண்டாமென்று பார்க்கிறேன். நீதான் என் கணவருக்கு மிகவும் பிரியமானவன். உன் மூலம் கொடுத்தனுப்பினால்‌ மிகவும் மரியாதையாய் இருக்கும். ராஜமாதாவிடம் கொடுத்துவிட்டு வா  என்று சொல்லி ஹனுமானை சீதை  அனுப்பிவிட்டாள்.ராமன் எழுந்திருப்பதற்குள் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடலாம் என்று சீதை போனாள்.நேரமாகிக்கொண்டே இருந்தது. வழக்கமாய் அதிகாலை எழும் பழக்கமுள்ள ராமன் இன்று படுக்கையை விட்டு  எழவேயில்லை. சுப்ரபாதம் இசைப்பவர்கள் ஸ்ருதி சேர்க்கும்போதே எழுந்து பாட்டுக்கள் முழுவதையும் கேட்பார். காலை நேரத்து வீணையிசை ராமனுக்கு மிகவும் பிடிக்கும். பாடி முடித்ததும் அவர்களைப் பார்த்து ஒரு அழகான முன்முறுவல் செய்வார். அதையே அவர்கள் மிகப்பெரிய வரப்ராசாதமாய் எண்ணி மகிழ்ந்து போவார்கள்.இன்று அவர்கள் பாடி முடித்தாயிற்று. ஆதவனுக்கு முன்னால் எழும் ராம சூரியன் பள்ளியறை விட்டு வரவில்லை. ஸ்நானம் செய்துவிட்டு வந்து பார்த்த ஸீதைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.என்னாயிற்று? உடம்பு சரியில்லையா?   அருகில் சென்று பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. ராமன் வாயைத் திறந்துகொண்டு, ஆனால் விழித்துக்கொண்டு தான் படுத்திருந்தார். என்னவாயிற்று ஸ்வாமி? ஆதவன் வந்துவிட்டான். எழ மனமில்லையா?பதிலில்லை.பதில் சொல்லாமல் ராமன் திருதிருவென்று விழிப்பதைப் பார்த்தால் சீதைக்கு பயமாய் இருந்தது. எழுந்திருங்கள் ஸ்வாமிதோளைப் பிடித்து உலுக்கினாள். ம்ஹூம் வாய் திறந்தே இருந்தது. அவளையே ராமன் விழித்துப் பார்க்க மிகவும் பயந்து போன சீதை இளவல்களுக்கு அவசரச் செய்தி அனுப்பினாள்.மூன்று தம்பிகளும் ஓடிவந்து முடிந்தவரை முயற்சி செய்தனர்.ராமன் எழவும் இல்லை. வாயை மூடவும் இல்லை. பற்றாக்குறைக்கு காது வரை நீண்ட அவரது தாமரைக் கண்களை வைத்துக்கொண்டு பரிதாபமாக கண்களை உருட்டி உருட்டி விழித்துப் பார்த்தார். என்னவோ உடம்புதான் சரியில்லை போலும் என்று நினைத்து ராஜ வைத்தியருக்குச் சொல்லியனுப்பினார்கள்.   அவர் வந்து தலையைப் பிய்த்துக் கொண்டார்.நாடி நன்றாய்ப் பேசுகிறது. கழுத்தை ஆராய்ந்து பார்த்தார். தாடையிலும், கழுத்திலும் ஒரு ப்ரச்சினையும் இல்லை. பின் ஏன் வாய் மூடவில்லை? ஏதாவது மந்திர தந்திரமாய் இருக்குமோ?எனக்குத் தெரியவில்லை. குலகுருவைக் கூப்பிடுங்கள்.வசிஷ்டர் வந்தார். குருவுக்குத் தெரியாதா சீடனின் நிலைமை? கண்டதும் சிரித்தார்.ராமா இதுவும் ஒரு விளையாட்டா? மனதிற்குள் நினைத்தவர், கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு  ஹனுமான் எங்கே? என்றார்.சேதி வந்ததும் பறந்து வந்தார் ஹனுமான். மன்னித்துவிடுங்கள் ப்ரபோ என்று சொல்லிக்கொண்டே திறந்திருந்த ராமனின் வாய்க்கு நேராக இரண்டு சொடக்குகள் போட, ராமன் வாயை மூடிக்கொண்டார். இதற்குள் மாலையாகிவிட்டது. கிட்டத்தட்ட  ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. கொட்டாவிக்கு சொடக்கு போடுவதெல்லாம் ஒரு வேலையா என்று நினைத்தவர்களுக்கு அதை ஒரு கைங்கர்யமாகச் செய்வேன் என்று சொன்ன ஹனுமான் மீது சற்றே இளக்காரம் வந்துவிட்டது போலும்.  ஆனால், அதையும் ஒரு கைங்கர்யமாக மதித்து ஏற்றுக்கொண்ட ராமன் அதற்காக ஒரு நாளெல்லாம் வாயைத் திறந்துகொண்டே இருப்பார் என்றால்,  கைங்கர்யத்தில் உயர்வு தாழ்வேது?   சிறிய வேலையாக இருந்தாலும் அதை இறைவன் உவந்து ஏற்றுக்கொண்டால் அதுதான் பெரிய கைங்கர்யம். மலை போன்ற போன்ற செயலானாலும் இறைவனுக்கு உகப்பில்லையெனில் அதன் பயன் உடலுக்கு ஏற்பட்ட சிரமம் மட்டுமே.ஹனுமானைப் போல் நுழைந்து நுழைந்து கைங்கர்யங்களைக் கண்டுபிடித்து அதை இறைவன் உகக்கும்படி விநயமாகச் செய்ய வேண்டும். கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதும்,  புனருத்தாரணம் செய்வதும் பெரிய கைங்கர்யம். ஆனால், அதே சமயத்தில்,  கோவில் பிரகாரத்தைக் கடக்கும்போது கண்களில் படும் ஒற்றடைகளைக் களைவதும், ஆங்காங்கே கோபுரத்திலும், மண்டப இடுக்குகளிலும் முளைக்கும் செடிகளைக் களைவதும், கோவில் வளாகத்தினுள் குப்பை போடாமல் இருப்பதோடு,  கண்ணில் படும் குப்பைகளை அகற்றுவதும் கும்பாபிஷேகத்திற்கு ஒப்பான கைங்கர்யங்களே..    ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s