
துவாரகை மன்னரான கண்ணனின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னால் மட்டுமே முடியும் என்ற எண்ணம் கருடனுக்கு இருந்தது. கண்ணனின் கையிலுள்ள சக்ரமோ தன்னை கொண்டே அசுரர்களை வதம் செய்கிறார் என்ற எண்ணம் எழுந்தது. கண்ணனின் மனைவியரான பாமா ருக்மணிக்கோ தாங்களே உலகில் உயர்ந்தவர்கள் என செருக்கு கொண்டனர். இவற்றை எல்லாம் அறிந்த கண்ணன் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தனர்.

கருடா உடனே கந்தமாதன பர்வதத்திற்கு புறப்படு. அங்குள்ள குளத்தில் சவுந்திக கமலம் என்னும் மணம் மிக்க மலர் பூத்திருக்கிறது. அதைப் பறித்து வா என கட்டளையிட்டார். எல்லா செயல்களையும் என்னால் தான் கண்ணன் சாதிக்கிறார் என்ற பெருமிதத்துடன் அவனும் வானில் பறந்தான். அங்கு மலரை பறிக்க முயன்றபோது எழுந்த சப்தத்தால் குளக்கரையில் தியானம் புரிந்த அனுமன் விழித்துக்கொண்டார். ஏ கருடனே இந்த பர்வதம் குபேரனுக்கு சொந்தமானது. அவரின் அனுமதி பெறாமல் மலர் பறிக்க முடியாது எனத் தடுத்தார்.
கண்ணனுக்காக மலர் பறிக்க வந்துள்ள எனக்கு யாரும் அனுமதியளிக்கத் தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்தார். கோபத்தால் முகம் சிவந்த அனுமன் தன் தோளில் கருடனை கட்டி இழுத்தபடி துவாரகை வந்தார். கருடனின் நிலை கண்டு பரிதாப்ப்பட்ட சக்கராயுதம் சீறிக்கொண்டு அனுமனைத் தாக்க வந்தது. ஆனால் அதை சுழல விடாமல் தடுத்தார் அனுமன். கருடனும் சக்கரமும் செய்வதறியாமல் திகைத்தனர். அனுமன் வந்திருக்கும் விஷயம் அறிந்த கண்ணன் தன் தேவியரை அழைத்தார். இதோ பாருங்கள் அனுமனின் தியானம் கலைந்ததால் கோபத்துடன் துவாரகை வந்திருக்கிறான் அவனை சாந்தப்படுத்த சீதாராமர் இங்கு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் துவாரகையே ஒரு நொடியில் காணாமல் போகும். நீங்கள் யாராவது ஒருவர் சீதை போல வேடமணிந்து வாருங்கல். அதற்குள் நானும் ராமனாக வேடமணிந்து வருகிறேன். இருவருமாக அனுமனை சமாதானம் செய்யலாம் என்றார்.

சிறிது நேரத்தில் ராமன் போல் வேஷம் தரித்தார் கண்ணன். தேவியருக்கோ சீதையைப் போல் மாறவோ முடியவில்லை காரணம் தங்களின் அலங்காரத்தில் ஏதோ குறையிருப்பதாக உணர்ந்தனர். முடிவில் கண்ணனின் காதலியான ராதாவுக்கு வேடம் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தனர். சம்மதித்த ராதையும் உடனடியாக சீதையாக வேடமிட்டு கண்ணனுடன் புறப்பட்டாள். ராமர் சீதையை பார்த்த அனுமனுக்கும் கோபம் மறைந்தது.
அனுமனே உன் தோளில் என்ன கட்டியிருக்கிறாய் எனக் கேட்டார் ராமர். சுவாமி ஒன்றுமில்லை என் தியானத்தை களைத்த இந்த பறவையையும் வழி மறித்த சக்கரத்தையும் தோளில் கட்டி வைத்துள்ளேன். தங்களுக்கு சேவை செய்ய அடியேன் காத்திருக்கிறேன் என்றார். பாவம் சிறுபிள்ளைத்தனமாக நடந்த இவர்களை தண்டிக்காதே கடமையாற்ற வழிவிடு என்றார் கண்ணன். ஆணவத்தில் சிக்கிக் கிடந்த கருடனையும் சக்கராயுதத்தையும் விடுவித்தார் அனுமன். இதைக் கண்ட தேவியரும் மனம் திருந்தினர். ஜெய் ஸ்ரீராம் என ஜபித்தபடியே கந்தாமாதன் பர்வதம் புறப்பட்டார் அனுமன்.