
கிளிமுகம் கொண்ட முனிவரான சுகபிரம்மர் பூவுலகில் இருந்து வானுலகம் புறப்பட்டார். வழியில் மேரு மலையை வலம் வந்து கொண்டிருந்த சூரியன் கண்டார். சுகபிரம்மரே பிரம்மச்சாரியான தங்களுக்கு இல்லற வாழ்வின் பெருமையோ பிள்ளைச் செல்வத்தின் மகத்துவமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதனால் வானுலகம் செல்ல அனுமதிக்க மாட்டேன் எனத் தடுத்தார் சூரியன்.
அவரிடம் முனிவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டால் மனிதன் பக்குவ நிலை பெற முடியும் என்பது உண்மை. ஆனால் இல்லற வாழ்வில் எனக்கு விருப்பமில்லை. சாதாரண மானிடர்களுக்குரிய விதிகளை என்னுடன் ஒப்பிட தேவை இல்லை என்றார் சுகபிரம்மர்.
சுகபிரம்மரின் விளக்கம் கேட்டு சூரியன் சிரித்தார். வியாசரின் மகனான தாங்களே இப்படி சொல்வது முறையல்ல. முன்னோர் கடன் செய்ய பிள்ளைகள் இருப்பது அவசியம். சாஸ்திரத்தை மதிப்பது தங்களின் கடமை என்றார் சூரியன். இதைக்கேட்ட சுகபிரம்மரின் மனம் மாறியது. தவசக்தியால் புத்திரன் ஒருவனை உருவாக்கி சாயா சுகர் என பெயரிட்டார். அவனிடம் சுகபிரம்மர் தவத்தால் கிடைத்த தங்கமகனே புனித தலமான காசியில் தங்கியிருந்து முன்னோர் கடனை சரிவர செய்து வா என வாழ்த்தி அனுப்பி பயணத்தை தொடர்ந்தார்.