
ரத்தினபுரி நாட்டை ஆண்டு வந்தவர் வீரசேனன். அவரது நிர்வாகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் மக்கள். அவரது அவைக்கு வந்தார் பண்டிதர் வேம்பு நாதன். தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார் மன்னர். நளினமான அவரது உரையில் அனைவரும் மெய் மறந்தனர். பேச்சை ரசித்துக் கொண்டிருந்தபோது உங்கள் நாட்டில் நிறைய அறிவாளிகள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதனால் போட்டி ஒன்றை நடத்த அனுமதிக்க வேண்டும்………..என்றார் பண்டிதர். அப்படியே ஆகட்டும்……….என்றார் மன்னர்.
என் கேள்விக்கு சரியாக பதில் கூறுபவருக்கு மன்னர் எனக்கு அளித்த 1000 பொற்காசுகளை சன்மானமாக தருகிறேன் தவறாக பதில் தந்தால் கைத்தடியால் முதுகில் நான்கு முறை அடிப்பேன் இன்னொரு விஷயம்………….. நீங்களும் கேள்வி கேட்கலாம் சரியான பதிலை நான் அளித்தால் பரிசு எதுவும் தர வேண்டாம். தவறாக கூறினால் நீங்கள் அளிக்கும் தண்டனையை ஏற்க தயாராக இருக்கிறேன் ……என்றார். பண்டிதர் புத்திமான் மட்டுமல்ல ஆணவக்காரரும் கூட என அந்த நாட்டு புலவர்கள் முணுமுணுத்தனர்.
போட்டி துவங்கியது பண்டிதரின் கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் முதுகில் அடி வாங்கினர் பல புலவர்கள். யாருக்கும் அவரிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் வரவில்லை. அன்று மாலை…………கடைவீதியில் உலவியபடியே என்ன நாடு இது……என் கேள்விக்கு யாருமே சரியாக பதில் கூறாமல் இப்படி அடி வாங்குகிறீர்களே………….ஒரு புத்திசாலிகூட இந்த நாட்டில் இல்லையா…………….என ஏளனம் செய்தார் பண்டிதர். இதைக்கேட்ட சிறுவன் குமரன் சற்று நிதானமாக அவரை உற்று நோக்கினான். கூடவே ஒரு யோசனையும் உதித்தது.
மறு நாள் அரசவைக்குள் நுழைந்தான். அவையோருக்கு வணக்கம் தெரிவித்தப்பின் மன்னா………………பண்டிதரிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்…….என்றான். இந்த பொடியன் கேள்வி கேட்க போகிறானாம்………என கிண்டலாக சிரித்தபடி…………………கேளும்……………….கேளும் என்றார் பண்டிதர். நான் பொடிப்பையன் தான் அதனால் பதிலும் பொடியாக இருக்கவேண்டும் அதாவது என் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை ……என்று ஒரே வார்த்தையில் பதில் கூறினால் போதும் அப்படியே செய்கிறேன்……………
நேற்று மாலை கடைவீதியில் உங்கள் பின்னால் வந்த நான் என் தாத்தாவின் கைத்தடியால் ஓஅவி அடித்துவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட்டேனே அந்த அடி தந்த வலி இன்னமும் உள்ளதா………..என்று கேட்டான் சிறுவன். திணறி திகைத்தார் பண்டிதர். கேள்விக்கு ஆம் என்றாலும் இல்லை என்று கூறினாலும் அடி வாங்கியது போலாகிவிடுமே என்று மனம் நடுங்கினார்.
அவரது அறிவில் தெளிவு பிறந்தது. என் ஆணவத்திற்கு கிடைத்த அடி என எண்ணி சிறுவனை அணைத்து மன்னிப்பு கேட்டார். வாக்களித்திருந்த படி 1000 பொற்காசுகளை சன்மானமாக வழங்கினார். ஆணவத்தில் அறிவிழந்து விட்டதாக அவையோரிடமும் மன்னிப்பு கேட்டார். பண்டிதரின் செருக்கை அடக்கிய சிறுவனை வெகுவாக பாராட்டினர் மன்னர்.