கண்ணகி அம்மன் ஆலயம் பற்றிய பகிர்வுகள்


மதுரையை எரித்த கண்ணகிக்கு பல இடங்களில் வழிபாட்டு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயங்களில், பகவதி அம்மன் என்று அழைக்கப்படும் தெய்வம் கண்ணகிதான் என்ற கூற்றும் நிலவுகிறது. கற்பில் சிறந்த கண்ணகிக்கு தமிழகம் மற்றும் கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி மலையில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்பட்டு திருவிழா காண்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்பு பற்றி இங்கே காணலாம்.


*வரலாறு :*
சோழ நாடான காவிரிப்பூம்பட்டினத்தில், கோவலனுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தாள் கண்ணகி. கோவலனுக்கு யாழ் இசைப்பதில் அதீத ஆர்வம் உண்டு. அதே போல் ஆடல், பாடல்களிலும் விருப்பம் கொண்டவனாக இருந்து வந்தான். இந்த நிலையில் பூம்புகாரில் ஆடல் தொழில் செய்து வந்த மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மகிழ்ந்தான். அவளிடம் தன் மனதை பறிகொடுத்தான். அவர்களிடையே நெருக்கம் ஏற்பட்டதால், கண்ணகியை மறந்து, மாதவியின் வீட்டிற்கு சென்று அவளுடன் வாழ்க்கையை வாழத் தொடங்கினான். கோவலனின் செல்வம் அனைத்தும் குறைந்து போகிறது. மாதவியுடன் மனம் வேறுபட்டு, அவளை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்ந்தான்.
தான் இழந்த பொருள் அனைத்தையும் மீட்டுவிடும் நோக்கத்தில், கண்ணகியை அழைத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெளியேறி, மதுரை நோக்கிச் செல்கிறான். அங்கு கோவலன் வணிகம் செய்வதற்காகக் கண்ணகி தனது காற்சிலம்புகளில் ஒன்றினைக் கழற்றிக் கொடுக்கிறாள். கோவலன் கண்ணகியை மாதரி எனும் ஆயர்குலப் பெண்ணிடம் அடைக்கலமாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்தச் சிலம்பை விற்பதற்காக நகருக்குள் செல்கிறான்.
நகருக்குள் சென்ற கோவலன், தான் கொண்டு சென்ற சிலம்பை அங்கிருந்த அரண்மனைப் பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அந்தப் பொற்கொல்லன் முன்பே அரசியின் சிலம்புகளில் ஒன்றைத் திருடி இருந்தான். அந்தக் குற்றத்தை மறைக்க இதுதான் சரியான நேரம் என்று எண்ணிய அவன் அந்தச் சிலம்புடன் அரண் மனைக்குச் செல்கிறான். அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியினைக் கண்டு அரசன் தன்னை மறந்து விட்டான் என்று நினைத்து, அரசி மனம் வேறுபட்டு அந்தப்புரம் சென்று விடுகிறாள்.
அரசியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அரசன் அந்தப்புரம் செல்லும் வழியில், பொற்கொல்லன் அரசனைக் கண்டு, அரசியின் சிலம்பு காணாமல் போன குற்றத்தில் கோவலனைத் திருடனாக்கிக் குற்றம் சுமத்துகிறான். இந்நிலையில் அரசன் அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் கோவலனுக்கு மரண தண்டனை அளித்து விடுகிறான். கோவலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இச்செய்தி அறிந்த கண்ணகி கோபத்துடன் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று வழக்கு உரைக்கிறாள். இந்த வழக்கின் முடிவில் உண்மையறிந்த பாண்டிய மன்னன், தனது தவறான தீர்ப்பை நினைத்து வருந்தி, அவன் அமர்ந்திருந்த அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறந்தான். அரசனைத் தொடர்ந்து அவனது மனைவியும் மன்னன் மார்பு மீது சாய்ந்து அழுதபடி தன் உயிர் நீத்தாள். அதன் பின்பும் கண்ணகியின் கோபம் குறையவில்லை. கற்பில் சிறந்த 7 பெண்களின் பெயரை உச்சரித்து, ‘அவர் களைப் போல் நானும் கற்பில் சிறந்தவளாக வாழ்ந்தது உண்மையானால், இந்த மதுரை தீக்கிரையாகட்டும்’ என்று சாபமிட்டாள். அவளது கற்பின் வலிமையால் மதுரை மாநகரமே நெருப்புக்கு இரையானது. அதில் தீயவர்கள் இறந்தனர்; நல்லவர்கள் உயிர் தப்பினர்.

பின்னர் கண்ணகி அங்கிருந்து வெளியேறி, நீண்ட தூரம் நடந்து சென்ற அவள் சேரநாட்டை அடைகிறாள். அங்கிருந்த குன்றில் வேங்கை மர நிழலில் நின்று கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட வேடுவர்களிடம், தான் அடைந்த துன்பம் கொண்ட தனது வாழ்க்கையை முழுமையாகக் கூறுகிறாள். அதன் பின்னர், அங்கு வானோர் வடிவில் வந்த கோவலனோடு, கண்ணகி தெய்வ விமானமேறி தேவலோகம் சென்றாள். இதனைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் கண்ணகியை, அம்மனாக நினைத்து ‘இவளே நமது காவல் தெய்வம்’ என்று கூறி வழிபடத் தொடங்கினர்.நன்றி. *ஓம் நமசிவாய*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s