அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்’

“காஞ்சி பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்று கேட்டால், ‘மஹா பெரியவர்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் ” என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ கட்டுரையில் கூறியிருந்தார்.

உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார். ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.

மஹா பெரியவா 1973ம் ஆண்டு, தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய அத்தியாயம் இது…

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர்.  அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே  போய்க் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மகா யோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார்.
தெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய் விட்டால், வயது தோன்றாது. பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே விழுகிறது.  முதிர்ந்த ஞானிகள் யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை; அவர்களே முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது    என்றால், ‘தெய்வம் அவர்களோடு பேசுகிறது’ என்று பொருள்.

சிருஷ்டியை வியப்போடு நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டுபிடிப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம். படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை. உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.

அதோ, அந்த ஒளியோடு அந்த மகா யோகி போய்க் கொண்டிருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று. அது ஆன்ம யாத்திரை.
நாற்பது வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முதல் குமரி வரை தன் காலடியை பதித்தார்.
அந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை.

ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை. முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது.
காலணிகள் ஏதும் அணியாமல் வெற்று பாதத்துடன் மஹா பெரியவா யாத்திரை செய்துகொண்டிருந்தபோது…!

மகா நதி பாறையின் மீது மோதினாலும், நதி சேதமடைவதில்லை; நாளாக நாளாக பாறை தான் அளவில் சுருங்குகிறது. கங்கை நதியில் எவ்வளவு தண்ணீர் ஓடினாலும் சக்ரவாகப் பட்சி பனித்துளியைத் தான் நாடுகிறது.

சில வண்டுகள், மலரில் மட்டுமே அமர்கின்றன. சில பறவைகள், பசுமையான மரங்களில் மட்டுமே அமர்கின்றன.

மகா யோகியின் வைராக்கியம் மணம் மிக்கது. பசுமையானது.  இரவும் பகலும் உலகில் மாறி மாறி வருகின்றன.

லௌகிகவாதிக்கு இரண்டும் ஒன்றாகவே தோற்றமளிக்கின்றன. உலகத்தில் அவர்களுக்குள்ள உறவெல்லாம், தெய்வம் மட்டுமே.

அந்தத் தெய்வத்தின் பரிபாஷையைச் சாதாரண மனிதனுக்குச் சொல்லும் துதுவர்கள் அவர்கள். அதனால் தான் மற்ற மனிதர்களின் தலையை விட அவர்களது பாதங்கள் உயர்ந்திருக்கின்றன.   லோகயாத சுகத்தை முற்றும் துறந்து விட்டுத் தார்மிக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது, தர்மம் நடைபாதை விரிக்கிறது.  மகா யோகம் மலர்கள் தூவுகிறது.
மகாராஜக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது.

ஆந்த்ராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கி போய்க் காஞ்சிப் பெரியவர் ஓரிரவு தங்கினாராம். ‘சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தொஷப்பட்டார்களாம் .அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலைமையை உண்டாக்க கூடாது.   உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் பேரொளி.
அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால், ‘இந்து மதம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ மஹா சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

அந்த ஞானப் பாசத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது.  கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும்.  செஞ்சி கோட்டைக்குப் போகிறவர்களெல்லாம் ராஜா தேசிங்கு அல்ல.  காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகளல்ல.    ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு, ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.     சாலையின் இரு மருங்கிலும் அந்த யோகியைத் தரிசிக்க ஜனக் கூடம் திரளுகிறது.  இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்த அந்த வரம் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் பொது, அவரைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.  ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்” என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம்.
பசுக்களிலே மலட்டுப் பசுக்களைக் கூட அறுக்கக் கூடாது என்பது இந்துக்களின் வாதம்.  யோகிகளில் ஒரு சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது என்றால் இந்த மகா யோகியைப் பிராமணதல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.
புத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லியிருக்கிறார்.
ஏசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார்.  அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ ஒரு நாளும் இருந்ததில்லை.  அரசியல் வில்லங்களில் மாட்டிக் கொண்டதில்லை.
பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே.

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.
அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s