தொடரும் இரயில் சினேகம்

train4

மிக அழகாகப் பிறந்தது புது வருடம்.  முதல் நாளே அதாவது ஜனவரி 1, 2016 அன்று  புதுவருட பரிசாக எனக்குப் பேத்தி பிறந்தாள்.  தவிர்க்க முடியாத சில காரணங்களால் என் பெண் பிரசவத்திற்கு பிறந்தகம் வர இயலவில்லை.   அதனால் இம்மாதம் 15ம் தேதி பொங்கல் பண்டிகை முடிந்ததும் சென்னைக்கு கிளம்பினேன். மனம் நிறைய ஆசைகள் பெட்டி நிறைய பேரன் பேத்திக்காக  பரிசுகள்.  என்னை வண்டி ஏற்ற என் பிள்ளை வந்திருந்தான்,. சென்னை ஹைதிராபாத் விரைவு வண்டியில் முன் பதிவு செய்துகொண்டிருந்த இடத்தில் உட்கார்ந்தபிறகு தான் தெரிந்தது எனக்கு A1 ல் மேல் படுக்கை பதிவாகியுள்ளது என்பது.  யாரையாவது கேட்கலாம் என்றால் அதில் இருந்த அனைவரும் என்னைவிட வயதில் பெரியவர்கள். என்ன செய்வது? இதனிடையில் வண்டி கிளம்பியது.  வேறு எங்காவது கீழ் படுக்கை கிடைக்குமா என கேட்டுப்பெறலாமே என்று. டிடி வரும்வரை காத்திருந்தேன்.

train

பக்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் தங்களுடைய கைபேசியில் ரொம்பவும் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.  என்னுடன் கொண்டுவந்திருந்த மங்கையர்மலரைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினேன். சுமார் பத்து நிமிடம் கழித்து டிடி வந்தார்.  கேட்டேன்.  இதுபோல் நிறைய அன்று ஆகியுள்ளது என்றும் அதே பகுதியில் சுமார் 10 அல்லது 12 பேருக்கு மாற்றிக் கொடுத்ததாகவும்  கண்டிப்பாக முயற்சி செய்வதாகவும் சொல்லிச் சென்றார்.  மேலும் 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு அடுத்தப் பகுதியில் அதாவது A 2 ல் 5 ம் எண் காலி உள்ளதாகவும் அங்கு போகும்படியும் சொல்லி என் வயிற்றில் பாலை வார்த்தார்.  சந்தோஷமாக பெட்டிகளைத் தூக்கி கொண்டு அடுத்த பகுதிக்கு சென்றேன். எண்களை தேடிக்கொண்டிருந்தபோது “ மாமி 5ம் எண் இங்கே இருக்கிறது ‘ என ஒரு மலர்ந்த முகம் என்னை வரவேற்றது.  பெட்டிகளை கீழே வைத்துவிட்டு என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பார்த்தபோது என் பிள்ளை வயதில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளுக்கு மேல் படுக்கை எனவும் தன் பெயர் பானு எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன். இந்தக் கால பெண்கள் போல் எப்போதும் கைபேசியில் வாட்ஸ் அப்பில் செய்திகள் அனுப்பிக்கொண்டோ பாட்டுக் கேட்டுக்கொண்டோ இல்லாமல் என்னுடன் மிக கலகலப்பாக பேசினாள். நான் என் பெண்ணைப் பார்க்க போவதுபோல் அவள் அவளது வயதான பெற்றோர்களை பார்க்கப்போய்க் கொண்டிருப்பதாக சொன்னாள். பிறகு இருவரது குடும்பம் வாழ்க்கை  அன்றாட அலுவல்கள் பற்றி பேசித்தீர்த்தோம். இடைவிடாத பேச்சு  நான் தனியாகவே பிரயாணம் செய்ததில்லை  என் பெண் அல்லது பிள்ளை யாரோ ஒருவர் என்னுடன் வருவர். இந்த முறை நான் மட்டுமே எப்படி பிரயாணம் செய்யப்போகிறேன் என பயந்துகொண்டே வந்த எனக்கு ஒரு நல்ல தோழி கிடைத்தாள்.

சுமார் இரவு 10 மணிவரை  பேசிக்கொண்டிருந்தோம்  இடையில் பேசியபடியே சாப்பிட்டோம். நடு நடுவில் எங்கள் குடும்பத்தவர்களின் கைபேசி அழைப்புக்கு பதில் சொல்லிவிட்டு பேசினோம் பேசினோம் அப்படி பேசினோம். என் பெண்ணுக்கு என் இனிய பயணம் பற்றி சொன்னபோது ‘ ஓ உனக்கு பதிவு எழுத ஒரு நிகழ்வு கிடைத்துவிட்டதா? ‘ என கிண்டலடித்தாள். நிஜம் தான் கட்டாயம் பதிவு எழுதவேண்டிய விஷயம் தான்.

train3

பானு திருமணமாகி 16  வருடம் அமெரிக்காவில் இருந்திருந்துவிட்டு தற்போது ஹைதிராபாத் வந்து தங்கியிருக்கிறார்கள்.  ஆனால் அந்தப் பெண்ணிடம் ஒரு கர்வமே அது பற்றி இல்லை.  ஓரிரு வருடங்கள் படிக்க என சென்றுவிட்டு திரும்பும் சிலர் ஏதோ அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் போல்  நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டும்  அவர்களைப் போல் உடையணிந்து கொண்டும் நம்மை பயமுறுத்துவார்கள்.  இவளோ அடுத்த வீட்டுப்பெண்மணி போன்று மிகவும் தன்மையாக இனிமையாக பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. நடை உடை பாவனை எல்லாம் நம் நல்ல எண்ணங்களையும் பண்பாட்டையும் பொறுத்ததுதான் என அர்த்தமானது. மறு நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்தவள் சிரித்தபடி காலை வணக்கம் சொன்னாள். கைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டோம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஒரே ஊரில் தானே இருக்கப்போகிறோம்  பேசவும் சந்திக்கவும் முடியுமே என சொல்லிப் பிரிந்தோம்.  அன்பாக அணைத்து விடை கொடுத்த விதம் எனக்கு இன்னொரு பெண் கிடைத்த நிறைவைக் கொடுத்தது.

best friends

பிறகு சென்னையிலிருந்து நானும் அவளும் பல முறை பேசினோம். குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொண்டோம். இப்போது மின்னஞ்சலிலும் தொடர்பில் இருக்கிறோம். இரயில் சினேகிதம் என்று சொல்வதே அந்த பயண நேரத்தில் சில செய்தி பரிமாற்றங்களோடு முடிந்துவிடுவதுதான்  ஆனால் இந்த அபூர்வ இரயில் சினேகிதம் இன்னும் தொடர்வது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.  என் தனிமை இரயில் பயணத்தை பயனுள்ளதாக இனிமையாக மாற்றிய அந்த பானுவிற்கு என் மனமார்ந்த ஆசிகளும் நன்றிகளும்.

One thought on “தொடரும் இரயில் சினேகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s