வாரியாரின் வாக்கு வன்மை

 

ஒரு முறை மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் திரு நாவுக்க்ரசரின் பெருமை பற்றி சொற்பொழிவு நிகழ்த்திகொண்டிருந்தார் வாரியார் சுவாமிகள்.

மெய்யன்பர்களே…………variyar

திருச்சிற்றம்பலத்தானின் திருவிளையாடல் காரணமாக சைவ சமயத்திலிருந்து சமண மதத்திற்கு போன திரு நாவுக்கரசர் பின் சூலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் துடித்து மனம் நொந்து போனார். உடனே தன் சகோதரி திலகவதியைக் காண புறப்பட்டு சென்றார். கண்டார் சகோதரியை. சொன்னார் சூலை நோய் ப்ற்றி  தந்தார் அவர் திருநீறு. அதை நெற்றியிலும் நெஞ்சிலும் பின் உடல் முழுவதும் பூசிக்கொண்டவர் சிறிது வாயிலும் இட்டுக்கொண்டார்.

மறு நாள் காலை மாயமாய் மறைந்து போயிற்று சூலை நோய். நீறணிந்த நிமலனை நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்குருகினார். சமணத்தை விட்டார். சிவாலயங்களை செப்பனிடும் திருப்பணி மேற்கொண்டார். பதிகங்களால் சிவபெருமானை பாடினார். அவர் நாவன்மையும் சிவத்தொண்டும் நாடெங்கும் பரவ நாவுக்கரசர் புகழ் ஓங்கியது.

“ இது பொறுக்காத சமணர்கள் மன்னன் மகேந்திரவர்ம பல்லவனிடம் நாவுக்கரசரை பற்றி பொய்யான தகவல்கள் சொல்லி அவரை கொல்லவேண்டுமென்று தூபம் போட்டனர். ஆராய்ந்தறியாத அரசனும் அவர்களின் சூது வார்த்தையை நம்பி நாவுக்கரசரை சுண்ணாம்பு காளவாயில் தள்ள உத்திரவு பிறப்பித்தான். நாவுக்கரசரோ கனல் கக்கும் சுண்ணாம்பு காளவாயில் சம்மணமிட்டு அமர்ந்தார். சிவயோகத்தில் ஆழ்ந்தார். எரியும் காளவாய் பன்னீர் சொரியும் பசுஞ்சோலையாக குளிர்விக்க நெஞ்சம் குழைந்த நாவுக்கரசர் ‘ மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் ‘ என்று பதிகம் பாடி பக்தி பரவசமானார்.16

அக்காட்சியைக் கண்டு திடுக்கிட்ட மன்னன் உணவில் விஷம் கலந்து கொல்ல ஆணையிட்டான். ஆலகால விஷத்தையே உண்ட நீலகண்டனின் தொண்டரான நாவுக்கரசர் இதையும் ஒரு கை பார்ப்போம் என்று விஷ உணவை விருந்தாக சுவைத்து உண்டு ஏப்பம் விட்டார். இதைப்பார்த்து திகைத்துப்போன அரசன் யானை காலால் நாவுக்கரசர் தலையை இடற கட்டளையிட்டான். யானையோ தவம் செய்து சிவப்பழமாக காட்சி தரும் நாவுக்கரசரை வலம் வந்து அவர் முன் மண்டியிட்டது. இதைக் கண்டு அதிர்ந்து போன அரசன் நாவுக்கரசரை கல்தூணில் சங்கிலியால் பிணைத்து நடுக்கடலில் கொண்டு போய் மூழ்கடிக்குமாறு காவலர்களை ஏவினான். அவர்களும் அப்படியே செய்தனர். நாவுக்கரசர் சற்றும் நடுக்கம் கொள்ளாமல்  ‘ சொற்றுணை வேதியன் சோதியானவன்………..’ என்று பதிகம் பாட அவர் பக்தியின் சக்தியால் இரும்புச் சங்கிலிகள் மலர் சரங்களாக மாறின. கல்தூண் கனமற்ற தக்கையாகி பின் படகாக உருவெடுக்க அதில் ஏறி கரை ஒதுங்கினார்.

நாவுக்கரசரின் அரும் பெரும் சக்தியை அறிந்த அரசன் தன் தவறை உணர்ந்தான். திரும்பவும் சைவ சமயத்திற்கு திரும்பினான். என்னே என் தலைவன் திரு நாவுக்கரசரின் பக்தி. அதன் சக்தி …………..என்று வாரியார் சுவாமிகள் மனம் மகிழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கையில் நாத்திக இயக்கத்தை சேர்ந்த அன்பர் ஒருவர் எழுந்து “ சரி உங்க தலைவர் மாதிரி உங்களையும் கல்லோடு சேர்த்துக்கட்டி இந்த கோவில் பொற்றாமரை குளத்திலே தூக்கி போட்டுடலாம். இங்க தலைவர் திரு நாவுக்கரசு மாதிரி அவர் தொண்டர் நீங்க தப்பித்து வர்றீங்களான்னு பார்க்கலாமா?” என்று  கேட்க சபையோடு திடுக்கிட்டு போயினர்.

ஆனால் வாரியார் சுவாமிகள் நிதானமாக ‘ அப்படியா சரி என் தலைவர் இருக்கட்டும் உன் தலைவர் யாரு? அவர் மதுரைக்கு வந்திருக்கிறாரா……….அவர் வந்தா அவருக்கு நீ என்ன செய்வே? “ என்று கேட்டார். அந்த நாத்திக அன்பர் ‘ எங்க தலைவர் மதுரைக்கு வந்தா அவருக்கு மாலை மரியாதை செய்வது தான் என் முதல் வேலை. அன்றைக்கு பூக்கடையிலே மாலையே  கிடைக்காது. எல்லாருமே தலைவருக்கு மாலை வாங்கிப்போடுவதற்காக போட்டி போட்டு வாங்கிட்டு போயிடுவாங்க “ என்றார்.

தலைவருக்கு மாலை மரியாதை செய்கின்றனரே ………… அவர் தொண்டனான உனக்கு யாரும் மாலை மரியாதை செய்ய மாட்டார்களா? ‘ என்று கேட்டார் வாரியார்.

‘ அதெப்படி ………………… தலைவருக்குத்தான் மாலை மரியாதை செய்வாங்க. அதெல்லாம் தொண்டனுக்கு எப்படி கிடைக்கும்…?” என்றார் அந்த அன்பர்.

உடனே வாரியார் ‘ எப்படி மாலை மரியாதையெல்லாம் உன் தலைவரைத் தவிர தொண்டரான உனக்கில்லையோ அது போலத்தான் அற்புத சக்தி அருமை பெருமையெல்லாம் என் தலைவர் திரு நாவுக்கரசருக்கு மட்டும் தான் உண்டு. அவர் தொண்டனான எனக்கு அந்த சக்தி கிடையாது….’ என்று சொல்லவும் அந்த அன்பர் வாயடைத்து போய் உட்கார்ந்து விட்டார். சபையோர் தங்கள் கரவொலியால் வாரியாரின் வாக்கு சாதுர்யத்தை பாராட்டி மகிழ்ந்தனர்.

 

Advertisements

One thought on “வாரியாரின் வாக்கு வன்மை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s